0
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலய பேத்தாழை விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் மழை பெய்தால் கூட கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக வீதியில் தேங்கி கிடக்கும் சேற்று நீரால் பாடசாலை செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள மருத நகர், கண்ணன் கிராமம், விநாயகபுரம் மற்றும் பேத்தாழையின் ஒரு பகுதி ஆகிய கிராமங்களில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர்கள் பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் இருந்து குறிஞ்சி நகர் வரை செல்லும் பாதையையே பிரதான பாதையாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த பாதையே குண்டும் குழியுமான நிலையில் சேற்று நீர் தேங்கி காணப்படுகிறது.

மேற்படி கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் அருகில் இருந்து செல்லும் மற்றும் பல கிராமங்களை ஒன்றிணைக்கும் பாதையே இது. இதனால் மாணவர்கள் சிறு மழை பெய்தால் கூட பாடசாலை செல்லும் போதும் பிரத்தியேக வகுப்புக்கு செல்லும் போதும் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமலும் சேற்றுத் தண்ணீரின் அசெளகரியத்திற்கு ஆளாகியும் காணப்படுவதோடு பெரும் சங்கட நிலையை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இவர்கள் வேறு பாதையை பயன்படுத்த முற்பட்டால் சுற்றி செல்லும் நிலை ஏற்படுவதோடு உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது சம்பந்தமாக இப்பிரதேச வாசிகள் கருத்து வெளியிடுகையில், இந்த பாதையை தான் நாங்கள் பயன்படுத்துகிறோம். ஆனால் எங்களால் பாதணி அணிந்து செல்ல முடியாமல் இருக்கிறது. உடைகளில் சேற்று நீரின் கறையும் படுகின்றது. நாங்கள் பிரதானமாக பயன்படுத்தும் வீதியான இதை யாருமே கவனிப்பாரில்லை. காபெட் வீதியோ அல்லது கொங்றீற் வீதியோ தேவையில்லை. இப்போதைக்கு கிறவல் பரவி தந்தால் போதும்.

பிள்ளைகளை இதே பாதையால் தான் பாடசாலைக்குச் செல்கின்றனர். ஆனால் இந்த பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பது எங்களுக்கு மிக சிரமமாக உள்ளது. ஆகவே உரியவர்கள் இதற்கு தீர்வை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். மிகவும் கோடை காலத்தில் ஒரு மழை பெய்தால் கூட இந்த பாதையில் தான் அதிகளவான நீர் தேங்குகிறது. ஆகவே மிக விரைவில் இதற்கு தீர்வை உரியவர்கள் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனத் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பாக வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளரை தொடர்பு கொண்ட போது, வீதிகளுக்கு கிறவல் இடுவதற்கு அபிவிருத்தி குழு கூட்டங்களில் தீர்மானித்ததுடன் தற்போது அதற்கான விசேட அனுமதி கிடைத்து இருக்கிறது. அத்துடன் எதிர்வரும் வாரங்களில் வீதிகளுக்கு கிறவல் இடும் பணியை ஆரம்பிக்க இருக்கிறோம் என தெரிவித்தார்.

Post a Comment

 
Top