0
மொசூல் நகரம் முழுவதும் சுரங்கப்பாதை அமைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், அதன் வழியாக ராணுவம் மீது திடீர் தாக்குதல் நடத்துவதால் கூடுதல் படைகள் வரவழைக்கப்படுகின்றன.
ஈராக்கில் 2-வது பெரிய நகரமான மொசூல் நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ளது.

அந்த நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த பெரும் பகுதிகளை ராணுவம் மீட்டு விட்டது. தற்போது இந்த ஒரு நகரம் மட்டும் தான் அவர்கள் வசம் உள்ளது.

அதை மீட்பதற்காக ஈராக் படைகள் அந்த நகரை முற்றுகையிட்டுள்ளன. அவர்களுடன் குர்து படை, ஷியா படை, சன்னி பழங்குடியினர் படை ஆகியவையும் தாக்குதலை நடத்தி வருகின்றன.

தெற்கு பகுதிகளில் இருந்து ஈராக் படைகளும், கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் இருந்து குர்து, ஷியா படைகளும் முன்னேறி நகரை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றன.

தற்போது மொசூலின் புறநகர் பகுதிகள் ஒவ்வொன்றாக ஈராக் படையிடம் வீழ்ந்து வருகின்றன. புறநகரை தாண்டி மொசூல் நகரின் எல்லைக்குள் படைகள் புகுந்து விட்டன.

ஆனால், நகருக்குள் நுழைய முடியாத அளவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கடுமையான தாக்குதலை நடத்துகிறார்கள். மேலும் ராணுவம் நுழையாமல் இருக்க தடுப்பு வேலிகளை அமைத்து உள்ளனர்.

நகரம் முழுவதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சுரங்கப் பாதைகளை அமைத்து இருக்கிறார்கள். அதன் வழியாக திடீர், திடீரென வந்து ஈராக் படைகள் மீது தாக்குகிறார்கள்.

ஈராக் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டு படைகள் விமான தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனால், பெரும்பாலான ஐ.எஸ். தீவிரவாதிகள் சுரங்கங்களுக்குள் பதுங்கி இருக்கிறார்கள். எனவே, விமான குண்டு வீச்சால் அவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, சுரங்கங்களை அழிக்கும் நவீன குண்டுகளை வீசுகின்றனர்.

மேலும் ராணுவ படைகளை சிக்க வைக்கும் வகையில் ஆங்காங்கே வெடி குண்டு பொறிகளை தீவிரவாதிகள் அமைத்து உள்ளனர்.

சுரங்கங்களுக்குள் பதுங்கி இருந்து சண்டையிடுவதாலும், வெடி குண்டு பொறிகளை அமைத்து இருப்பதாலும் ராணுவத்தால் வேகமாக முன்னேற முடியவில்லை. எனவே, படைகள் நிதானமாக முன்னேறி வருகின்றன.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் உக்கிரமாக இருப்பதால் கூடுதல் படைகளை அனுப்பும்படி ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைவன் அபுபக்தர் அல்பக்தாதி ஆடியோ தகவல் ஒன்றை ஊடகம் மூலம் வெளியிட்டுள்ளான். அதில், அவன் மொசூல் நகரை ஒரு போதும் ராணுவத்தால் மீட்க முடியாது. நாங்கள் முன்பை விட ஆயிரம் மடங்கு அதிக சக்தியுடன் கடவுளின் எதிரிகளை தாக்குவோம். நமது வீரர்கள் எதிரிகளை ஒழிக்கும் வரை நிலையாக நின்று போரிட வேண்டும் என்று கூறி உள்ளான்.

அபுபக்கர் அல்பக் தி போரில் இறந்து விட்டதாகவும், படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வந்தன. இந்த நிலையில் அவன் புதிதாக ஆடியோ வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மொசூல் நகரில் 12 லட்சம் மக்கள் உள்ளனர். போருக்கு மத்தியில் அவர்கள் உயிரை கையில் பிடித்தபடி இருக்கிறார்கள். அங்கிருந்து தப்பி வந்தவர்கள் கூறும் போது, நகருக்குள் இருக்கும் மக்களை வெளியேறி செல்ல தீவிரவாதிகள் அனுமதிக்கவில்லை. மக்களுக்கு குடிநீர், சாப்பாடு எதுவும் இல்லை. இன்னும் பல நாட்கள் சண்டை நீடித்தால் ஏராளமனோர் பட்டினி கிடந்தே இறந்து விடுவார்கள் என்று கூறினர்.


Post a Comment

 
Top