0
வாழைச்சேனையில் அமைந்துள்ள இரண்டு மதுபானசாலைகளால் பாடசாலை மாணவர்களின் கல்வி பாதிப்படைந்து கொண்டு செல்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஹோட்டல்களைத் தவிர்த்து ஐம்பத்து ஒன்பது மதுபான சாலைகள் உள்ளன. ஜனாதிபதியால் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் நுவரெலியா மாவட்டங்களில் தான் அதிகளவு மதுபாவனைகள் இடம்பெறுகின்றது எனகூறப்பட்டுள்ளது .

எனவே இந்த விடயத்தில் அரச அதிகாரிகள், கலால் திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் இல்லாதுவிடின் மக்கள் போராட்டம் இடம்பெறும். இது கலால் திணைக்களத்தின் செயற்பாட்டிற்கு பெரும் குந்தகமாக அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்தோடு வாழைச்சேனையில் அமைந்துள்ள இரண்டு மதுபானசாலைகள் பாடசாலைக்கு அண்மித்து காணப்படுகின்றமையாலும், பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு அருகில் காணப்படுகின்றமையாலும் பல்வேறு பிரச்சனைகள் இடம்பெறுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

அத்தோடு இவ்விடயமான உரிய நடவடிக்கையை மேற்கொள்வதுடன், மாணவர்களின் கல்வி குறைவடைந்து செல்வதுடன் மாணவர்களும் இவ்வாறான பழக்கத்திற்குள் உள்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை உருவாகி வருகின்றது.கலால் திணைக்கள அதிகாரிகள் மக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை மேற்கொள்வதுடன் இரவு வேளை மற்றும் விடுமுறை நாட்களில் வீடுகளில் விற்பனை செய்பவர்களையும் இணங்கண்டு பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எமது பிரதேசங்களில் அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு காணிகள் சுவீகரிக்கப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது. இது சம்மந்தமாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. அரசியல்வாதிகளின் நலன் கருதி பொதுமக்களின் வாழ்வாதாரத்தினைப் பாதிக்கும் செயற்திட்டங்களை நாம் அனுமதிக்க மாட்டோம்.அரச காணிகள் பல ஒப்பம் மூலம் பெறப்பட்டு அதனை வைத்து வங்கியில் கடனும் பெறப்பட்டு ஹோட்டல்களும் அமைத்திருக்கின்றனர். அதற்கான ஆதாரங்களும் எம்மிடம் இருக்கின்றன.

ஆனால் ஏதோ ஒருவகையில் தொழில் முயற்சி ஒன்று இடம்பெறுகின்றது என்பதனால் இவற்றைப் பொறுத்துக் கொள்கின்றோம். ஓவ்வொரு மாதமும் இவ்வாறு அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெறும் இது தொடர்பில் மக்கள் அவர்களின் கருத்துக்களை எமக்கு தெரியப்படுத்த முடியும்.தமிழ் பிரதேசங்களில் மாத்திரம் அல்லாது முஸ்லீம் பிரதேசங்களிலும் வீதிப் பிரச்சினைகள் இருந்தால் அவையும் புனரமைக்கப்படும் சகலருக்கும் சமமான முறையில் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Post a Comment

 
Top