0
எமது மண்ணை நாங்களே சுயநிர்ணயம் செய்யக் கூடிய சுயாட்சியுடன் ஆளக்கூடிய விதத்தில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலய 125 வருட ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழாவின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு காலத்தில் இந்த நாட்டில் கூட்டாச்சி இடம்பெற்றது, காட்டுச் சட்டங்கள் இருந்தன அந்த நேரத்தில் பலர் பயத்தினால், பணத்தினால், படுகொலை செய்வதினால், பயமுறுத்தலினால் மற்றவர்களை மிரட்டி அடி பணிய வைக்கின்ற செயற்பாடுகளும் இடம்பெற்றன.
கடந்த கொடுமையான, அடக்கி ஒடுக்குகின்ற, வக்கிரமான ஆட்சி நடைபெற்ற காலத்தில் துணிந்து நின்று தமிழ் மக்களுக்காக மட்டுமல்லாமல், சிறுபாண்மை மக்களுக்காகவும், அடக்கப்படுகின்ற எதிர்க்கட்சியினருக்காகவும் துணிந்து நின்று குரல் கொடுத்து சரியான முறையில் ஒரு நல்லாட்சி நடைபெற வேண்டும் என்று அடக்கப்படுகின்ற, ஒடுக்கப்படுகின்ற பக்கத்தில் நின்று போராடியவர்களுள் அமைச்சரும் ஒருவர்.
எமக்கு தேசிய பிரச்சினை ஒன்று இருக்கின்றது அதற்கான சரியான, முறையான தீர்வுவரும் பட்சத்திலேயே மந்திரிசபையில் அமைச்சு பதவிகள் பெறுவது பற்றி சிந்திக்க முடியும் என்று. சம்மந்தன் தெரிவித்திருக்கின்றார்.
எமது தலைவர் சம்மந்தன் பிரதம மந்திரியுடனான கலந்துரையாடல் ஒன்றின் போது கூட பிரதமர் விடுத்த வேண்டுகோளுக்கு எங்களுடைய பிரச்சினையை முதலில் தீருங்கள் அதற்குப் பின்னர் மற்றைய விடயங்கள் பற்றி பார்க்கலாம் என்று ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
எமது தேசியப் பிரச்சினை சரியான, முறையான அதிகாரப் பகிர்வுடன் பிரிக்கப்படாத தேசத்தில் எமது மண்ணை நாங்களே சுயநிர்ணயம் செய்யக் கூடிய சுயாட்சியுடன் ஆளக்கூடிய விதத்தில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
எந்தவொரு இனமாக இருந்தாலும், எந்தவொரு சமுகமாக இருந்தாலும் எல்லோர் மத்தியிலும் நல்ல நாகரீகமான செயற்பாடுகள் இருக்க வேண்டும், நல்ல குணாம்சங்கள் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கின்ற போது தான் அவர்கள் எல்லோராலும் வரவேற்கப்படுவார்கள், வாழ்த்தப்படுவார்கள்.
எனவே நாகரீகமுள்ள சமுகமாக எங்களுடைய சமுகங்களை மாற்றிக் கொள்வதற்கு அந்தந்த அரசியல்வாதிகள் தங்களது சமுகத்தை வழிப்படுத்த வேண்டும். என அவர் தனது உரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top