புத்த பகவான் இந்து மதத்தின் ஒரு புரட்சியாகவே பௌத்தமதத்தினை தோற்றுவித்துள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரை ராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் இடம்பெற்ற கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் இடம்பெற்ற துன்பகரமான பக்கங்கள் இனிமேல் இந்த நாட்டில் புரட்டப்படக் கூடாது .
தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று தான் நாங்கள் அதிகம் பேர் இங்கு இருக்கின்றோம் எனவும் கூறியுள்ளார்.
மேலும், இலங்கையர்கள் என்போர் எம்மில் சிலர் தான் இருக்கின்றார்கள்.
இந்த நிலை மாறி நாம் அனைவரும் இலங்கையர்கள் என்று சொல்லுகின்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.
இரண்டு தேசிய மொழிகளைக் கொண்டிருக்கின்ற எமது நாட்டில் தமிழ் மக்களால் சிங்களம் பேசமுடியவில்லை. சிங்கள மக்களால் தமிழ் பேச முடியவில்லை என்பது துன்பகரமாக பக்கங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பது பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும்.
கிழக்கு மாகாண கூட்டுறவு அமைச்சினை நான் கையேற்கும் போது இந்த திணைக்களம் குறைபாடுகளின் குவியலாக இருந்ததமையை அவதானிக்க முடிந்தது.
இந்த இடத்தில் இருந்து தான் அதனைப் பெறுப்பேற்றேன். இந்த நிலையில் இருந்து தற்போது சிறப்பான ஒரு நிலையில் செல்வதற்கான ஆரம்பத்தினை ஏற்படுத்தி உள்ளோம் என நான் நம்புகின்றேன்.
தற்போது இருக்கின்ற கூட்டுறவு சார்ந்த சட்டங்கள் பிழைகளை, தவறுகளை, குற்றங்களைப் பிடிப்பது தொடர்பில் மிகவும் மந்த கதியிலானதாகவே இருக்கின்றது.
இது நாடு முழுவதும் உள்ள குறைபாடு. இது தொடர்பரில் மத்திய அரசாங்கம் தான் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் மாகாண சபையினூடாக நாம் நியதிச் சட்டங்களை உருவாக்க முடியும்.
இருப்பினும் திருடர்களை பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என தமிழில் ஒரு வார்த்தை இருக்கின்றது அது செய்பாட்டிற்கு வரும் போது தான் பலவற்றை மாற்ற கூடியதாக இருக்க முடியும்.
இங்கு பல்வேறு குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டது அது தொடர்பில் கூட்டுறவு ஆணையாளருடன் கதைத்திருக்கின்றோம்.
கூட்டுறவுச் சங்கங்களின் ஆர்வத்தை குறைத்திடாத விதத்தில் உங்களுக்கு தரக் கூடிய ஆதரவை எமது அமைச்சு தரும் எனவும் கூறியுள்ளார்.
இத்தோடு சேர்ந்து நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன, 2015ம் ஆண்டு இந்த நாட்டில் முக்கியமான ஒரு மாற்றம் நடைபெற்றது.
இதன் காரணமாகத்தான் நான் தமிழில் உரையாற்றும் போது சிங்கள மக்களாகிய நீங்கள் பொருமையோடு கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் நிகழ்வுகளில் நாங்கள் கலந்து கொள்கின்றோம்.
இவ்வாறு பற் பல விடயங்கள் இங்கு நடைபெற்றன. அதாவது நாங்கள் மொழி கடந்தவர்களாக, எமது மொழிகளை மகிழ்வுடன் பரிமாறிக் கொள்கின்றவர்களாக இருக்கின்ற இந்த மாற்றம் அந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட மாற்றத்தின் வெளிப்பாடுகளே.
இந்த நிலைமைய இந்த நாட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் இருக்க முடியாது, இருக்கக் கூடாது என்றே நான் நினைக்கின்றேன்.
இலங்கையர்கள் என்போர் எம்மில் சிலர் தான் இருக்கின்றார்கள். இந்த நிலைமாறி நாம் அனைவரும் இலங்கையர்கள் என்று சொல்லுகின்ற நிலைவர வேண்டும்.
பௌத்தமதம் என்பது இந்து மதத்திலிருந்து சென்ற ஒரு புரட்சிகரமான மதம்.
புத்த பகவான் இந்து மதத்தில் ஒரு புரட்சியாகவே பௌத்தமதத்தினை தோற்றுவித்தார். எனவே தமிழர்கள் சிங்களவர்கள் மதம் என்கின்ற ரீதியில் வேறுபாடாக இருந்தாலும் கூட கலாச்சாரத்தில் ஒன்றாகத்தான் இருக்கின்றோம்.
அதுபோலவே முஸ்லிம் மக்களைப் பொருத்த வகையில் எமது மதங்கள் தான் வேறுபாடு ஆனால் மொழி என்கின்ற ரீதியில் நாங்கள் ஒருமித்தே இருக்கின்றோம்.
எனவே நாங்கள் வேற்றுமையிலே ஒற்றுமை கண்டு இந்த நாட்டினுடைய இயற்கை நிலைமையை அறிந்து இதற்கு ஏற்ற விதத்தில் தற்போது அமைக்கபட இருக்கின்ற அரசியலமைப்புச் சட்டம் சிறந்த முறையில் அமைப்பதற்கு அனைவரும் ஒத்துழைத்து எமது நாடு இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த் துளியாக அல்லாமல் இந்து சமுத்திரத்தின் முத்தாக இருந்திட அனைவரும் செயற்பட வேண்டும், இதற்காக நாம் சிந்தித்திட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment