மட்டக்களப்பு தமிழ் சமூகம் மிகவும் பாதாளம் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. நாம் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு இன்னொரு சமூகம் எம்மை சுரண்டுகின்ற நிலை காணப்படுகின்றது. நிலங்கள் பறிக்கப்படுவதும், வளங்கள் சுரணடப்படுவதும் தினம்தினம் அரங்கேறுகின்றன.இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத சமூகமாக நாம் மாறிவருவது வேதனையானது. எமது இளைஞர்கள் மத்தியில் சமூகம் சார்ந்த சிந்தனையும் எமது மண் மீதான பற்றும் குறைவடைந்து வருவதை காணமுடிகின்றது. பதவிக்கும் பணத்துக்கும் சோரம் போகும் ஒரு சமூகமாக நாம் மாற்றப்பட்டு வருகின்றோம்.
நகர்ப்புறங்களில் பக்கத்து வீட்டில் யார் வாழ்கின்றார்கள் என்பதுகூட தெரியாத நிலையில் எமது சமூகம் தமது வாழ்க்கையையும், சமூக உறவையும் சுருக்கியுள்ளது.
சமூகம் ஒற்றுமையாகவும் மனிதாபிமானத்தோடு வாழ்கின்ற நிலையினை கிராமப்புறங்களில் காணக்கூடியதாக இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் நகரை நோக்கி நகர்கின்ற மாயையில் எமது சமூகம் நகர்ப்புறங்களை நோக்கி குடிபெயர்கின்ற நிலை காணப்படுகின்றது.
அன்று கிராமப்புறங்களில் எமது சமூகத்தில் இருந்த ஒற்றுமை, சமூக அக்கறை இன்றைய இளைய தலைமுறையில் இல்லாதநிலை காணப்படுவதுடன் கல்விக்காகவும், தொழிலுக்காகவும் நகர்ப்புறங்களை தேடிச் செல்கின்ற இளைய தலைமுறையினர். தமது கிராமத்தினைக்கூட மறந்துவிடுகின்ற நிலையும் காணப்படுகின்றன.
ஒரு கிராமத்தில் பிறந்த ஒருவர் கல்வியில் உயர் நிலையினை அடைந்து, உயர் பதவிகளைப்பெறுகின்றபோது தனது கிராமத்தையும், அச்சமூகத்தையும் மறந்துவிடுகின்ற நிலையும், பின்தங்கிய கிராமத்தில் பிறந்த ஒருவர் தான் உயர் நிலையினை அடைகின்றபோது தனது பிறந்த கிராமத்தினை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவதற்கு தயங்கும் நிலை பலரிடம் காணப்படுகின்றது. தான் கிராமத்தவன் என்பதை வெளிப்படுத்தினால் தன்னை தாழ்த்தி விடுவார்கள் தனது அந்தஸ்து குறைந்துவிடும் என்கின்ற மனநிலை சிலரிடமுண்டு.
யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்குண்டு எமது தேசம் சிதைக்கப்பட்டுள்ளதுடன் எமது இனமும் சின்னாபின்னமாக்கப்பட்டு எமது மக்கள் தொடர்ந்தும் பல அவலங்களை சந்தித்து வருகின்றனர். எமது சமூகத்தில் பல இளம் விதவைகள் உருவாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானவர்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கின்றனர்.
மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்த இந்த இளம் விதவைகள் தமது அன்றாட ஒருநேர உணவிற்கே திண்டாடுகின்ற நிலை காணப்படுகின்றது. உணவிற்கு வழியில்லை. தமது பிள்ளைகளை எப்படி படிக்க வைக்க முடியும்?
குழந்தைகளை சிறுவர் இல்லங்களில் விட்டுவிட்டு தனது வயிற்றுப்பசியை தீர்க்க அன்றாடம் பிச்சை எடுக்கின்ற, கூலித்தொழில் செய்கின்ற எத்தனையோ விதவைகளை நாம் அன்றாடம் காண்கின்றோம்.
தனது அன்றாட உணவிற்காகவும் தனது பிள்ளைகளின் கல்விக்காகவும், நிறுவனங்களிலும், வியாபார நிலையங்களிலும் வேலை செய்கின்ற எத்தனையோ இளம் பெண்களை நாம் அன்றாடம் சந்திக்கின்றோம் எத்தனை இளம் பெண்கள் வயதான தனது தாய்க்காக பல அவலங்களை சந்தித்து வியாபார நிலையங்களில் தொழில்புரிகிறார்கள்.
வறுமையை காரணம்காட்டி எமது இளம் பெண்கள் பலர் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுகின்றனர். வறுமையில் வாடும் எமது இளம்பெண்களை தமது உடல் இச்சைகளை தீர்ப்பதற்காக இன்னொரு சமூகம் பயன்படுத்துகின்ற அவலங்கள் இடம்பெற்றுவருகின்றன.
இன்று பல சிறுவர்கள் கூலிவேலை செய்கின்ற, பிச்சை எடுக்கின்ற நிலை காணப்படுகின்றது, கல்வியே எமது இனத்தின் எதிர்கால முதுகெலும்பு. பல திறமையுள்ள சிறுவர்கள் கல்வியை தொடரமுடியாமல் வீதிகளில் அலைகின்றனர்.
தினமும் பல அவலங்களை சந்தித்து வருகின்ற எமது சமூகத்தின் விதவைகள் தொடர்பிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் தொடர்பாகவும் சிந்தித்து பல திட்டங்களை முன்னெடுக்கவேண்டிய தருணத்தில் நாம் இருக்கின்றோம்.
மறுபுறத்தில் துரித கதியில் வளர்ச்சியடைந்துவரும் தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ப மனிதனும் மாறிவருகின்றான். இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் சிறுவர் முதல் வயோதிபர் வரை அனைவரையும் ஆக்கிரமித்துள்ளன.
சமூக வலைத்தளங்கள் மூலமாக பல்வேறு குற்றச்செயல்களும் , சமூக சீரழிவுகளும் அதிகரித்துச் செல்லும் நிலை காணப்பட்டாலும், சமூக வலைத்தளங்கள் மூலமாக பல நல்ல விடயங்களும் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்காக பயன்படுத்துகின்ற ஒரு நிலை பலரிடம் காணப்படுகின்றது. மறு புறத்தில் எமது தழிழ் சமூகத்தில் சமூகம் நோக்கிய சிந்தனைகள் இளைய தலைமுறையில் மறைந்துவருவதனைக் காணமுடிகின்றது. தானும் தனது குடும்பமும் வாழ்ந்தால் போதும் என்கின்ற மனநிலை பலரிடத்தில் காணப்படுகின்றன.
சமூக வலைத்தளங்கள் மூலமாக ஒன்றிணைகின்ற பலர் தங்களுக்குள் ஏற்படுகின்ற புரிந்துணர்வுகளின் அடிப்படையில் சமூகம் சார்ந்து சிந்திக்கின்ற ஒரு சிந்தனைக்களம் உருவாக்கப்பட்டு செயலில் சமூகம் நோக்கிய சிந்தனைகளுடன் பயணிக்கும் நிலை மட்டக்களப்பில் உருவாகியுள்ளதுடன் அதிரடியாக பல நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமை பாராட்டப்படவேண்டிய விடயமாகும்.
சமூக வலைத்தளங்களில் சமூகம் நோக்கிய சிந்தனை எவ்வாறு உருவானது, எவ்வாறு சமூக வலைத்தளமூடாக இளைஞர்கள் ஒன்றிணைந்தார்கள் அவர்களின் அவர்களின் பயண இலக்கு என்ன? தடைகள் என்ன?
தொடரும்
சந்ரு.
Post a Comment