0
மண்முனைப்பற்று, ஆரையம்பதி பிரதேசத்திற்குற்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கென கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை  (23.07.2016)  மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்படி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசன்,
கிராமமொன்றின் ஒற்றுமையை பலப்படுத்துவது விளையாட்டாகும். எமது நகரப்பகுதிக்கு நிகராக கிராமப்புறங்களிலும் மிகவும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களது திறமைகளை வெளிக்காட்ட பொருத்தமான முறைகளில் எமது பிரதேசங்களில் விளையாட்டுத்துறையினை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

அண்மையில் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பிற்கு வருகை தந்திருந்த போது அவருடன் வருகை தந்திருந்த விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க யுத்தத்தால் பாதிக்கப்பட்ட படுவான்கரை பிரதேசத்தில் மூன்று விளையாட்டு மைதானங்களை புனரமைத்து அபிவிருத்தி செய்ய ஏற்றுக் கொண்டதோடு மறுநாளே தனது அமைச்சின் பொறியியலாளரை மகிழடித்தீவு, நாவற்காடு, இலுப்பட்டிச்சேனை போன்ற இடங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்கு அனுப்பி ஆரம்பகட்ட மதிப்பீடுகளை செய்துள்ளனர். இதன் பிரகாரம் மூன்று மைதானங்களும் விரைவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள பாடசாலைகளை கல்வி அதிகாரிகள், பிரதேச மக்கள் யாவரும் இணைந்து அபிவிருத்தி செய்வதன் மூலம் தமது பிள்ளைகளுக்கு நகரப் பாடசாலைகளில் இடம் தேடி அலைவதை நிறுத்தமுடியும், எதிர்காலத்தில் இப்பிரதேசத்தின் கல்வி, விளையாட்டு மற்றும் கலாசார செயற்பாடுகளை வலுவூட்ட நான் பங்களிப்பை வழங்குவேன். எனத் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், திட்டமிடல்பணிப்பாளர், அலுவல உத்தியோகத்தரகள், மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

 
Top