0

கடந்த சில மாதங்களுக்கு முன் கனடா சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் முயற்சியின் பேறாக கனடா வாழ் தமிழ் உறவுகளால் இவ்வுதவி பெற்றுக்கொடுக்கப்பட்டது.
 யுத்தத்தினால் பாதிப்படைந்து புனர்வாழ்வு பெற்று மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசங்களில் வசிக்கும் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை கனடா வாழ் மக்களின் நிதி உதவியை கொண்டு அதற்கான உதவிகள் இன்று கரடியனாறு பிரதேசத்தில் வழங்கப்பட்டது.
17 பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு, குளிர்சாதனப் பெட்டி , மாடு, ஆடு, தோட்டப் பயிர் செய்கைக்குரிய நீர் இறைக்கும் இயந்திரம் போன்ற பெறுமதியான வாழ்வாதார உதவித் தொகைகள் வழங்கி வைக்கப்பட்டன.  
அதனடிப்படையில் இன்றைய தினம் இவ்வாறான உதவிகளை தங்களுக்கு வழங்கி வைத்த கனடா வாழ் செந்தில் குமரன் உட்பட கனடா வாழ் மக்களுக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் இவற்றுக்கு எல்லாம் முன்னின்று உழைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன் அவர்களுக்கும் பயனாளிகள் அனைவரும் நன்றியைத் தெரிவித்தனர்.

அத்துடன் இவ்வாறான உதவிகள் மென்மேலும் இந்த மாவட்டத்தில் வாசிக்கும் எம்மைப் போன்ற கால், கை, உடலில் பல அபவயங்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும் எதிர்காலத்தில் கிடைக்கவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், கனடா வாழ் செந்தில் குமரன் உட்பட பயனாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

பா.உ. வியாழேந்திரன்கருத்துத் தெரிவிக்கையில்!

வட கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகளில் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகியிருக்கின்ற முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை நிச்சயமாக வேகமாக முன்னெடுக்க வேண்டும்.

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கும் அவர்களின் அடுத்த தலைமுறை ஏனையவர்களைப் போல் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை.
முன்னாள் போராளியான இவர்களில் ஒரு சிலருக்கு மாத்திரம் மூவாயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுகின்றது.இந்த குறிப்பிட்ட தொகையைக் கூட பெற்றுக்கொள்ளாத எத்தனையோ முன்னாள் போராளிகள் தற்பொழுதும் இருக்கின்றார்கள்.
அரசாங்கத்தில் இருந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் வழங்கப்படும் வீடுகள் பெற்றுக் கொள்வதற்கு இந்த முன்னாள் போராளிகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு பல தடைகளை விதிக்கின்றார்கள்.
ஆகவே இவ்வாறு எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பட்டு மன வேதனைக்குள்ளாகி இருக்கின்ற முன்னாள் போராளிகளுக்கு நாங்கள் நிச்சயமாக கை கொடுத்து உதவ வேண்டும்.
தமிழர்களின் விடுதலைக்காக போராடிய இவர்களின் மூன்று தலைமுறை பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இன்று வெளியில் சென்று உழைக்கக் கூடிய நிலையில் சிலர் இல்லை.எமது தமிழ் சமூகத்தின் விடிவுக்காக போராடிய முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பு எமது புலம்பெயர் சமூகத்திற்கு இருக்கின்றது.
அதனை செய்து கொண்டு வருகின்ற நிலையில் இன்னும் பல முன்னெடுப்புக்களை துரிதமாக எடுக்கவேண்டும்.
இன்றைய தினத்தில் கனடா வாழ் செந்தில் குமரன் போன்றவர்களின் உதவி இவர்களுக்கு கிடைத்திருக்கின்றது.
இதேபோன்று பலர் எங்களது முன்னாள் போராளிகளுக்கு கை கொடுக்கவேண்டும்.அப்போது தான் அவர்களின் வாழ்க்கையிலும் ஒரு முன்னேற்றகரமான மாற்றத்தைக் கொண்டுவரலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு போன்ற படுவான்கரை பிரதேசமானது போராட்ட காலத்தில் மிகவும் முக்கியம் பெற்ற இடம், பல முன்னாள் போராளிகளைக் கொண்டதும், அதிகமான மாவீரர்களையும் இழந்தமை அத்துடன் வறுமையாகவும், வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படும் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்ற நிலையில் இவ்வாறான உதவிகள் பெரிதும் முக்கியம் வாய்ந்ததொன்று என தெரிவித்தார்.








Post a Comment

 
Top