0
மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அத்துமீறிய குடியேற்றங்கள் நடைபெறுவதுடன் இங்கு பௌத்த விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரதேசமான மயிலத்தமடு மற்றும் மாதவணை பிரதேசங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் இன்று இந்த பிரதேசங்களுக்கு கள விஜயத்தினை மேற்கொண்டு பார்த்தபோது இந்தப் பகுதியில் பல விடயங்கள் நடப்பதை காணக்கூடியதாக இருந்தது குறிப்பாக இந்தப்பகுதியில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருவதை காணக்கூடியதாக இருந்தது. 
இந்த விகரை அமைக்கும் பணிக்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அவர்கள் பின்னனியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் இங்குள்ள விகாராதிபதியுடன் பேசினோம் அவர் ஏற்கனவே தான் சிற்பி மடுவில் இருந்ததாக குறிப்பிட்டதுடன் தாங்கள் இந்தப்பகுதியில் கடந்த 60ஆம் ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.
எனவே அது குறித்து ஆராய்வதற்காக அவர்களிடம் உள்ள ஆதாரங்களை எடுத்துகொண்டு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கு வருமாறு அழைத்துள்ளோம்.
இப்போதைய சூழலில் இங்கு நடைபெறுவது ஒரு சட்டவிரோத குடியேற்றமே ஏனெனில் இங்கு நடைபெறுகின்ற குடியேற்றம் எந்த நிர்வாகத்திற்கும் உட்படாதவகையில் நடைபெறுவதால் இதனை சட்டவிரோத குடியேற்றமென்றே கூறவேண்டும் என்றார்.

Post a Comment

 
Top