(செய்தியாளர் மூலையூரான்)
வந்தாறுமூலை அம்பலத்தடியில் வரலாற்று சுவட்டு பிரதிஸ்டை மற்றும் உழவர் சிலை திறப்பு விழா 25.05.2016 அன்று பி.ப 03.01 மணியளவில் வந்தாறுமூலை மேற்கு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் பு.மணிவண்ணன் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
"சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை" எனும் வள்ளுவரின் குறளுக்கு அமைய உழவர்களின் சிறப்பை வெளிக்காட்டும் முகமாகவும் தமிழர்களின் வரலாற்று சுவட்டினை திதைவடையா வண்ணம் பாதுகாக்கும் முகமாகவும் வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகத்தின் சிந்தனையோட்டத்திலும், வந்தாறுமூலை மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாக்கத்திலும், வந்தாறுமூலை இளைஞர்களின் பங்களிப்பிலும்,வந்தாறுமூலையை சேந்தவரும் தற்போது பிரான்ஸ் நாட்டில் வசிக்கும்
திரு.இ.சைலகோபன் அவர்களின் நிதி உதவி என்பனவற்றின் மூலமாகவே இவ் உழவர் சிலை உருப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வானது இறைவணக்கத்துடன் ஆரம்பமாகி அடுத்து மங்கள விளக்கேற்றல்,உழவர் சிலை திறப்பு இடம்பெற்று வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய பிரதம குரு வணக்கத்துக்குரிய சிவஸ்ரீ.மா.ஜெயம்பலம் அவர்களினால் ஆசியுரை வழங்கப்பட்டு தொடர்ந்து வரவேற்புரை,தலைமை உரை இடம்பெற்று தொடர்ந்து நிதி உதவி புரிந்தவரின் தந்தையார்,வீதியை அகலமாக்குவதற்கு காணி வழங்கிய வனசிங்கா குடும்பத்தினர் ஆகிய இருவரும் வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகம், வந்தாறுமூலை மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கம்,இளைஞர்கள்,பொதுமக்கள் சார்பில் பிரதேச வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திரு.இ.சிறிநாத் அவர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.
அடுத்து அதிதிகள் உரை, இறுதியாக டைமன் விளையாட்டுக் கழக செயலாளரினால் நன்றியுரை இடம்பெற்று சுமார் 05.00 மணியளவில் நிகழ்வு நிறைவெய்தியது.
இன் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ.ச.வியாழேந்திரன், கௌரவ.ஞா.ஸ்ரீநேசன், கௌரவ.சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கௌரவ.கி.துரைராஜசிங்கம் அவர்களும்,கௌரவ அதிதிகளாக செங்கலடி பிரதேச சபை செயலாளர் திருமதி.K.ஜோன்பிள்ளை,ஏறாவூர் பொலிஸ் காவல் நிலையப் பொறுப்பதிகாரி திரு.சிந்தக பீரிஸ் அவர்களும்,சிறப்பு அதிதிகளாக ஓய்வு நிலை அதிபர் திரு. வ.கந்தசாமி,பிரதேச வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திரு.இ.சிறிநாத் அவர்களும்,அழைப்பு அதிதிகளாக வந்தாறுமூலை கிழக்கு கிராமசேவகர் திரு.G.A.விஜயகுமார்,உறுகாம திட்டத்தின் திட்ட முகாமைத்துவக் குழுத்தலைவர் திரு.க.புவிநாயகம் அவர்களும் மற்றும் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,ஊடகவியலாளர்கள்,பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள்,கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,விவசாய அமைப்புகள்,விவசாயிகள்,விளையாட்டுக் கழகங்கள்,ஊர் பிரமுவர்கள் புத்திஜீவிகள், வந்தாறுமூலை வாழ் பொதுமக்கள்,நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை
குறிப்பிடத்தக்கது.
அத்தோடு கடந்த காலத்தில் குறித்த இடத்தில் உழவர் சிலை அமைப்பதற்கு பல்வேறுபட்ட இடர்பாடுகள் மற்றும் சட்டச்சிக்கல்கள் காணப்பட்ட போதும் அரச நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடுகளின் பின்பு குறித்த இடத்தில் சிலையை நிறுவுவதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கி.மு 2ம் நூற்றாண்டுகளில் நாகர் இராச்சியத்தில் தமிழரின் சிற்றரசன் மணி நாகனின் பூர்வீக வரலாற்றுச் சுவட்டின் எச்சங்களில் ஒன்றாக கருங்கல் தூண்களை பிரதிஸ்ரை பண்ணப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய கிராமமாகிய இக் கிராமத்திற்காக கண்டி மன்னனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட சுமைதாங்கி மற்றும் இளைப்பாறும் மண்டபத்திற்கான வரலாற்று சான்றிற்காகவும் இவ் உழவர் சிலை நிர்மானிக்கப்பட்டுள்ளது.
வந்தாறுமூலை மற்றும் அண்டிய பிரதேசங்களில் நாகர்களின் ஆட்சி தடயங்கள் மற்றும் ஆட்சி மையங்கள் காண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுகளும் நடைபெற்று வருகின்ற நிலையில், குறித்த சிலைக்கருகில் தமிழர்களின் பண்டைய வரலாறு மற்றும் நாகர் காலத்து வரலாற்றைக் கூறும் கல்வெட்டுக்களையும் பதித்து அமைக்கப்பட்டுள்ளமை அதன் சிறப்பம்சமாக காணப்படுகின்றது.
வரலாற்றுதுறை பேராசிரியரும் யாழ்பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் அவர்களும் தொல்லியல் ஆய்வுக்குழு உறுப்பினரும் ஆசியருமான அ.பத்மநாதன் அவர்களும் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய காணியினுள் மேற்கொண்ட மேலாய்வுகள் மூலம் கருங்கல் தூண்களினால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு கருங்கல்லில் செதுக்கப்பட்ட நாக கல் என்பன கண்டுபிடிக்கபட்டன இதுபற்றி பேராசிரியர் குறிப்பிடுகையில்
இலங்கையின் பூர்வீக குடியினராக காணப்பட்ட தமிழர் மூதாதயரான ஆதி இரும்பு காலத்து பெருங்கற்காலபண்பாட்டு நாகவம்சத்தினர் தென்னிந்தியாவின் சோழமண்டல கடற்கரையிலுள்ள காவிரி பூம்பட்டிணம் போன்ற துறைமுக் பட்டிணம் மூலமாக மட்டக்களப்பு தேசத்திற்கு கடல்வழிமார்க்கமாக குடியேறினர். இவ்வாறு கடல்வழிமார்க்கமாக வந்த ஆதி இரும்பு காலத்து பெருங்கற்காலபண்பாட்டு நாகவம்சத்தினர ஆற்றுவழிமார்க்கமாகவும் தரைவழிமார்க்கமாகவும் தங்களது குடியேற்றங்களையுpம் குறுநில அரசுக்களையும் நதிக்கரைக்கு அண்மையில் உள்ள உயர்வான இடங்களிலும் மலைச்சாரல்களிலும் காடுகளை எல்லைகளாக கொண்ட பிரதேசங்களிலும் வில்லு புல்நிலங்களிலும் வெட்டவெளி சமவெளி நிலங்களிலும் நிறுவினர்.
வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையாரடியில் நாகரால் நிறுவபட்ட குறுநில அரசானது கடல்வழி ஆற்றுவழி தரைவழி என்பவற்றோடு தொடர்வுடையதாகவும் காடுகளை எல்லையாகவும் சமவெளி நிலமாகவும் காணப்பட்டுள்ளது. இங்கு கண்டுபிடிக்கபட்ட கிணறானது 3அடி3அடி பரப்பளவுடைய சதுரவடிவமும் 20அடி ஆழமுடைய கருங்கல் தூணினால் நிர்மாணிக்கப்படடுள்ளது. தூணின் வேள் நாகன் என்று தமிழ் பிராமி வரிவடிவம் காணப்படுகின்றது.
3அடி உயரமும் 2அடி அகலமுடைய நாக கல் காணப்படுகின்றது இதில் மணி நாகன் என்று தமிழ் பிராமி வரிவடிவம் காணப்படுகின்றது.கிணறுகள் மூலமாக நீரினை பெற்று பயன்படுத்தும் முறையுனையும் தோட்ட பயிர் செய்கையினையும் இங்கு குடியேறிய நாகவம்சத்தினர் உருவாக்கினர்.
இவ்விடம் நாகர்களின் வழிபாட்டு தலமாக காணப்பட்டதோடு கருங்கல் தூணினால் ஆலயததை அமைத்துள்ளனர்.
ஆனால் பிற்காலத்தில் ஆலயத்தில் உள்ள தூண்களை எடுத்து மக்கள் இளைப்பாறும் அம்பலம் ஒன்று ஆலயத்திற்கு அண்மையில் அமைத்துள்ளனர்.
ஆனால் அம்பலத்தின் எச்சம் மட்டும் தற்போது காணப்படுகிறது.இந்த அம்பலக் கற்களே தற்போது பிரதிஸ்ரை பண்ணப்பட்டு வரலாற்று சுவட்டினை பாதுகாக்கும் முகமாக உழவர் சிலையை தாங்கிய வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு கண்டுபிடிக்கபட்ட சான்றுகள் கி.மு 2ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நாகரசர்களின் கட்டுமானத்தில் உருவானவை எனவும் நாகரின் குறுநில அரசுப்பிராந்தியமாகவும் காணப்பட்டுள்ளது எனவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

































Post a Comment