0
அரசாங்கமும், பொலிஸாரும் பக்கச்சார்பாகவே செயற்பட்டு வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று(18.11.2016) இடம்பெற்ற வரவுசெலவுத்திட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவிக்கையில்,

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கடந்த 11ஆம் திகதி கண்டி வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தார்.

இவ்வேளையில், தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக பிரதேச செயலாளர் அவ்விடத்திற்கு சென்றிருந்தார். ஆனால் பிரதேச செயலாளரை தேரர் அவர் மீது முறையற்ற வார்த்தைகளை பிரயோகித்திருந்தார்.

மரியாதைக்குரிய பல தேரர்கள் இந்த மண்ணில் வாழ்ந்துள்ளார்கள். இருப்பினும் இவ்வாறானவர்களின் செயற்பாட்டால் முழு தேரர்களுக்குமே இழுக்கு ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும், இது முதல் தடைவை அல்ல. இவ்வாறன செயற்பாடுகள் காலங்காலமாக இடம்பெற்று வருகின்றன. அவ்வாறான செயற்பாடுகளுக்கு முறையான சட்ட நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

இதேபோன்று, கடந்த 16ஆம் திகதி செங்கலடியிலுள்ள தனியார் காணியொன்றினுள் அத்துமீறி நுழைந்திருந்தார். இருப்பினும் அக்காணியினுள் நுழையவோ கூட்டங்கள் நடத்தவோ அனுமதியில்லை என ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு மீறி நடந்துகொள்வோருக்கு, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக உரிய தண்டனை வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் இதன் பின்பே தேரர் அக்காணியினுள் அத்துமீறி நுழைந்திருந்தார். தேரர் அவ்வாறு செயற்படும் நேரத்தில் பொலிஸ் அதிகாரிகள் அருகிலேயே இருந்தும் கூட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் நாட்டின் அரசாங்கமும், பொலிஸாரும் பக்கச்சார்பாக செயற்பட்டு வருகின்றமை தெளிவாகத் தெரிகின்றது என குறிப்பிட்டார்.

மேலும், மற்றைய எல்லா மாகாணங்களிலும் அபிவிருத்தி அமைச்சுகள் காணப்படுகின்றன. அனால் யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு காணப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அபிவிருத்தி அமைச்சுகள் இல்லை என இதன்போது சுட்டிக்காட்டினார்.

Post a Comment

 
Top