0
பாரம்பரியங்களை தொலைத்துவிட்டு நிம்மதியற்ற எதிர்காலம் தொடர்பில் நிச்சயமற்ற நிலையிலேயே வாழ்ந்து வருவதாக மட்டக்களப்பு தாழங்குடா கல்வியல் கல்லூரியின் உப பீடாதிபதி எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் இன்று(02.11.2016) இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இன்றைய சமூகத்தின் மத்தியில் பேச்சு மற்றும் வாசிப்பு தொடர்ப்பில் சலிப்புதன்மையை காணமுடிகின்றது. இன்றைய நவீன யுகத்தில், பல்வேறுபட்ட நவீன சாதனங்களுடன் பிணைந்து வாழ்வதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

வாசிப்பின் ஊடாக மனிதன் பூரணத்துவம் அடைகின்றான் என்று கூறப்படும்போது அந்த பூரணத்துவம் எவ்வாறு கிடைக்கிறது என்பதை நாங்கள் ஆழமாக சிந்திக்கவேண்டும்.

நாங்கள் பல பாரம்பரிய விடயங்களை தொலைத்துவிட்டு இன்று நிம்மதியிழந்து, எதிர்காலத்தில் எமது வாழ்க்கை எவ்வாறு இருக்கப்போகின்றது என்று அறியாத வகையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கணினி யுகம் முடிவடைந்து தற்போது கையடக்க தொலைபேசி யுகத்தில் வாழ்ந்துகொண்டுள்ளோம். இன்று அடுத்தவருடன் பேசவேண்டிய தேவையும் இல்லை. கையடக்க தொலைபேசியை ஒரு வழிகாட்டியாக கொண்டு இயங்கும் காலமாக தற்போதைய காலம் இருந்து வருகின்றது எனக் கூறினார்.

மேலும் ஒரு மனிதன் பூரணத்துவம் அடைய வேண்டுமானால் அவன் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் முழுமை பெறுவதோடு எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மீக சிந்தனையுடன் வாழவேண்டும் என்று கூறியமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலையின் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் தமிழ் மொழிப்பிரிவிற்கான பிரதிக்கல்வி பணிப்பாளர் த.யுவராஜன் மற்றும் திட்டமிடல் பிரிவிற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஜனர் ஹைதர்அலி ஆகியோர் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக தாழங்குடா கல்வியல் கல்லூரியின் உப பீடாதிபதி எஸ்.ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

ஒக்டோபர் மாதம் முழுவதும் வாசிப்பிற்கான பல நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், இன்று மட்டக்களப்பு கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் வாசிப்பு மாத்தினை குறிக்கும் வகையிலான கற்றல் செயற்பாடுகளைக் கொண்ட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டதுடன், நடைபெற்ற பல்வேறுபட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.








Post a Comment

 
Top