0
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் குடி நீர் பிரச்சனை அதிகம் காணப்படுவதால் பிரதேச சபையிலுள்ள நிதியை கொண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் கிராமங்களுக்கு தண்ணீர் கொள்கலன் வைத்து அதில் தினமும் நீர் வழங்குவதற்கு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வாகரைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன் போது வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் குடிநீர் பிரச்சினை, வீதிப் பிரச்சினை, போக்குவரத்து பிரச்சினை, கால் நடைகள் இறத்தல், மணல் அகழ்த்தல் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, மரம் வெட்டுதல் பிரச்சினை, காணிப் பிரச்சினை உட்பட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் இவ்வருடத்திற்குள் 300க்கும் மேற்பட்ட கால் நடைகள் இறந்துள்ளது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயமாக பிரதேசத்திலுள்ள கால் நடையாளர்களை ஒன்று கூட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒன்றுகூடல் நடாத்தி இதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் இரவு நேரங்களில் மரங்கள் வெட்டப்பட்டு அவை வேறு பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்படுவதற்கான ஆதாரங்களை பொதுமக்கள் சபையில் காட்டியிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக வன பரிபாலன திணைக்களத்தினர் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது.

குகனேசபுரத்திலும் இரவு வேளைகளில் மணல் அகழ்வு நடவடிக்கை இடம்பெறுவதாகவும் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விடயமாக பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

யுத்தத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்து தற்போது வயல் காணியில் விவசாயம் செய்ய வருகை தந்தவர்களுக்கு அவர்களுடைய காணி வழங்கப்பட்டுள்ளதுடன், அங்கு அவர்கள் குடிசை (வாடி) அமைத்து விவசாயத்தை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்குடா கல்வி வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகம் காணப்படுகின்றது.

ஆனால் அரசியல்வாதிகள் முதலில் இடமாற்றம் மற்றும் இரத்து செய்வதற்கு துணை போவதை உடனடியாக நிறுத்தினால் தான் இப்பிரதேசத்தில் கல்வியை முன்னேற்ற முடியும் என கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.துரைரெட்ணம், வாகரை பிரதேச செயலாளர் செல்வி.ஆர்.இராகுலநாகி மற்றும் அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment

 
Top