0
கிழக்கில் தொன்மை வாய்ந்த சக்தி ஆலயங்களில் ஒன்றாக பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் விளங்குகின்றது. 'தீப்பள்ளயம்'என்றால்தான் அனைவருக்கும் தெரியும்.

இங்கு நடைபெறும் பூசை வழிபாடுகள் ஏனைய ஆலயங்களில் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. திரௌபதி அம்மனை வருந்தியழைத்து கும்பிட்டு மன்றாடி வந்தனை செய்து வழிபடுகின்ற மரபும் பாண்டவர் வேடம் பூண்டு நிற்கின்றவர்களுக்குமே இங்கு விசேட பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றன. மனிதனை தெய்வமாக பூஜிக்கும் மகாசக்தி ஆலயமாகவும் திரௌபதி அம்மன் ஆலயம் விளங்குகின்றது.

இவ் ஆலயத்தின் திருப்பணிகள் கடந்த 10வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள்யாவும் பூர்த்தியடைந்து. கும்பாவிஷேகம் நடைபெற அம்மனின் திருவருள் பாலித்துள்ளது. ஆலய புனராவர்த்தன மகா தூபி கலசாபிஷேகம் 08 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.48 மணி முதல் காலை 8.43 மணிவரையுள்ள சுபமுகூர்த்தவேளையில் நடைபெறவுள்ளது. இதன் பூர்வாங்க கிரியைகள் யாவும் 07ஆம்திகதி புதன்கிழமை அதிகாலை ஆரம்பகின்றது. அன்று காலையிலிருந்து குந்தமாதேவிக்கு பொதுமக்களால் புஸ்பாஞ்சலி வழிபாடும் இடம்பெறவுள்ளது.

மகாபாரதக்கதையினை மையமாகவைத்து 18தினங்கள் பாண்டிருப்பு திரௌபதியம்மன் ஆலய உற்சவங்கள் நடைபெறுகின்றன. இலங்கையில் முதன்முதலில் திரௌபதி அம்மனுக்கென ஆலயம் அமையப்பெற்றது பாண்டிருப்பிலேயாகும். வட இந்தியாவில் இருந்து தாதன்மா முனியும் அவனது ஆட்களும் இந்தியாவின் கொங்கு நகரில் இருந்து கப்பலேறி புறப்பட்டவர்கள்.

கிழக்கு கரையை வந்தடைந்தனர்.  மட்டக்களப்பு பகுதியிலிருந்து புறப்பட்ட தாதன் மா முனிவன்  அந்நாளில் நாகர்முனை என அழைக்கப்பட்ட திருக்கோவிலைச் சென்றடைந்து அங்கு தங்கியிருந்து மகாபாரதக்கதையினை மக்கள் மத்தியில் பரப்பிவரலானான். இந்தியாவிலிருந்து தாதன் என்பவன் இங்கு வந்திருப்பதனை அறிந்துகொண்ட மட்டக்களப்பு பகுதிக்கு சிற்றரசனாக இருந்த மாருத சேனனுடைய புத்திரன் எதிர் மன்னசிங்கன். (கி.பி.1539-கி.பி. 1583வரை ) காலப்பகுதியில் தாதனைக்கண்டு அவனது நோக்கம் வருகை பற்றி விசாரித்து அறிந்துகொண்டான். தாதனும் தனது வருகையின் நோக்கம் பற்றி மன்னனிடம் எடுத்து இயம்பினான்.  அத்தோடு தமது வழிபாட்டிற்குகந்த இடம் ஒன்றைத்தேடி வழங்குமாறும் கேட்டுக்கொண்டான்.

எதிர்மன்னசிங்கனும் தாதனின் விருப்பப்படி அவனையும் அழைத்துக்கொண்டு மீண்டும் கடல் வழிப்பயணம் செய்தபோது அருகே கடலும் ஆலவிருட்சங்களும்  கொக்கட்டிமரங்களும் நாவல்மரங்களும் மேற்கே அடர்ந்த வனப்பகுதியும் காணப்பட்ட பாண்டிருப்பைக் கண்டு இறங்கி அங்கேயே தங்கி தான் கையோடு கொண்டுவந்திருந்த விஸ்ணு திரௌபதி பாண்டவர்கள் சிலைகளை வைத்து கொக்கட்டிமரத்தடியில் கொத்துப்பந்தலிட்டு வழிபாடு நடத்திவந்தான். மன்னனும் தாதனின் வழிபாட்டிற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கினான். இதேவேளை திரௌபதி அம்மனின் மகிமையை அறிந்துகொண்ட கண்டி மாநகரை ஆட்சி புரிந்த மன்னன் விமலதர்ம சூரியன் (கி.பி.1594-கிபி 1604) காலப்பகுதியில் இங்கு வந்து அம்மனை தரிசித்து விட்டு பொன் வெள்ளி பொருள்கொடுத்து சென்றதாக கல்வெட்டுக்களில் இருந்து அறியக்கிடக்கின்றது.

ஆரம்பத்தில் தாதன் ஆலயம் என அழைக்கப்பட்ட இவ்வாலயம் பின்பு  பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயம் என பேர்பெற்றது. இவ் ஆலயத்தின் பிரசாதமாக மருத்துவ மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் வாசனைமிக்க 'பாண்டாரப்பொட்டு' அற்புதம்மிக்கதும் பிணி தீர்க்கும் அரும் மருந்தாகவும் காணப்படுகின்றது. இலங்கையில் மிக நீண்ட தீக்குழியைக் கொண்ட ஆலயமாக பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பெண்கள் தீமிதிப்பில் ஈடுபடமுடியாது. ஆலய உற்சவ காலங்களில் பாண்டவர்கள் திரௌபதி விஸ்ணு தேவாதிகள் என ஆலயத்தில்  கட்டுக்கு நிற்பவர்கள்  எக்காரணம் கொண்டும் தங்களது வீடுகளுக்குச் செல்லமுடியாது அந்தளவிற்கு பயபக்தியுடன் விரதம' அனுஸ்டிக்கப்படுகின்றது.

இம்முறை ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 27ஆம் திகதி திருக்கதவு திறத்தல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 2016.10.14ஆம் திகதி நடைபெறும் தீமிதிப்புடனும் மறுநாள் தீக்குழிக்குப் பால்வார்க்கும் சடங்குடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.   

Post a Comment

 
Top