கிழக்கு மாகாணத்தில் வேலை செய்தவர்களில் பலர் பயங்கரவாத பிரச்சினை காரணமாகவும், ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தலாலும் தமது தொழில்களை விட்டு கடந்த காலங்களில் வெளிநாடு சென்றிருந்தனர்.
அவ்வாறானவர்களுக்கு மீண்டும் அவர்கள் வேலை செய்த இடங்களில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு இன்று அவர் கருத்துரைக்கையில்,
பதிலீட்டு தொழிலாளியாகவும், ஒப்பந்த அடிப்படையிலும், இழப்பீடு, தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் கூட்டுத்தாபனம், சபை, திணைக்களம், அமைச்சு போன்ற பல்வேறு இடங்களிலும் வேலை செய்தவர்களே அச்சுறுத்தல் காரணமாகவும், பயங்கரவாத பிரச்சினைகள் காரணமாகவும் தமது தொழில்களை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றிருக்கின்றனர்.
நாடு திரும்பியவர்களை மீள சேவையில் சேர்ந்து கொள்வது தொடர்பாக 2005க்கு பிறகு 2006, 2013, 2014 ஆண்டுகளில் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டு 2014ம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதற்கு இடைப்பட்ட காலகட்டத்திற்குள் அண்ணளவாக 20க்கு மேற்பட்டவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிரந்தர சேவைகளுக்கு மீள் நியமனம் வழங்க முடியாது என பொதுச்சேவை ஆணைக்குழு ஊடாகவும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பல தடவைகள் இது தொடர்பில் முறையிட்டும் எவ்விதமான முடிவுகளும் இன்றி பலவருட காலமாக (பத்து, பதினைந்து வருடங்களாக) வேலை செய்தவர்கள் தங்களுக்கான தகைமைகள் இருந்தும் 35வயக்கு மேற்பட்ட வயதினையுடையதினால் புதிய தொழில் ஒன்றினை பெற்றுக்கொள்ள முடியாமலும், பொருளாதார கஸ்டங்களுக்கும் உட்பட்டு பல துயரங்களை அனுபவித்து வாழ்ந்து வருகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் மன உளைச்சலுக்கும், பொருளாதார வருமானம் இல்லாமல் இருக்கின்ற இவர்களுக்கு கருணை காட்டி நிபந்தனைகளாவது முன்வைத்து திரும்பவும் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு நல்லெண்ணம் கொண்ட கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாணசபை உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.
இதேவேளை, குறித்த விடயத்தினை மாகாணசபை அமர்வின் போது அவசர பிரேரணையாக முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment