0
தந்திரோபாயமான, நுட்பமான முறையில் தொழில் வழங்குகின்ற உத்தியை தற்போதைய அரசாங்கம்        


கண்டுப்பிடித்திருக்கின்றார்கள். மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் 120சிற்றூழியர்களுக்கான நியமனங்கள் இருக்கின்றது என்றால் அந்த நியமனங்களுக்குரியவர்களை நியமிக்காமல் ஏனைய பெரும்பான்மையான மக்கள் வாழுகின்ற மாவட்டத்தில் இருந்து 120சிற்றூழியர்களையும் இடமாற்றம் செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வெற்றிடங்களை அடைத்துவிட்டு அந்த வெற்றிடங்களை பெரும்பான்மையான மக்கள் வாழுகின்ற இடங்களில் செயற்கையாக உருவாக்கிவிட்டு அந்த இடங்களுக்கு நியமனங்களை கொடுத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்ற விசமத்தனமான நுட்பத்தினை நல்லாட்சி அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்றது. இது நல்லாட்சி அரசாங்கம் தொழில்வாய்ப்பு வழங்குகின்ற செயற்பாட்டில் கடந்த கால ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட நுட்பத்தினையே இவ்வரசாங்கம் கடைப்பிடிக்கின்றது என்பதை வெளிக்காட்டுகின்றது. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் குறிப்பிட்டார்.

முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் 55வது ஆண்டு நிறைவினையொட்டி கடந்த சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர்; இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக நாட்டில் காட்டாட்சியை அகற்றி நல்லாட்சி மலரவேண்டும் என்பதற்காக அர்பணிப்பாக செயற்பட்டவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதை யாரும் மறந்துவிட முடியாது. அதற்கு பிரதி உபகாரமாக ஆட்சியமைத்த அரசாங்கம் எந்த விதத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை மிகவும் ஆளமாகவும் அர்த்த புத்தியுடனும் அவதானிக்க வேண்டிய நிலமை இருக்கின்றது.  


தொழில் வாய்ப்பினை வழங்குகின்ற விடயத்தில் அரசாங்கம் நல்லாட்சி என்ற தத்துவதத்தை மீறி செயற்படுகின்ற போக்கை காணமுடிகின்றது. நீர்வழங்கல் அமைச்சின் ஊடாக 233நியமனங்கள் வழங்கப்பட்ட போது 208நியமனங்கள் முஸ்லிம்களுக்கும் 20 நியமனங்கள் சிங்களவர்களுக்கும் 5நியமனங்கள் தமிழர்களுக்கும் வழங்கியிருக்கின்றனர். இது எந்த வகையிலும் நல்லாட்சி தர்மத்தை அடிப்படையாக கொண்டதல்ல எனவே அதற்கு பொறுப்பாக இருக்கின்ற ஹக்கிம் அவர்களிடம் இதைப்பற்றி உரத்துக் கூறவேண்டிய நிலமை ஏற்பட்டது ஆனாலும் இதற்குரிய பதில் சரியாக கிடைக்கவில்லை. 

வடகிழக்கு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக எதிர்கட்சி தலைவரின் ஊடாக ஒத்திவைப்பு பிரேரணை கொண்டுவந்தபோது இவ்வாறு பல்வேறுபட்ட விசமத்தனமான அல்லது ஒவ்வாத பல விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றது என்ற வகையில் நாங்கள் வெளிப்படையாக சொல்லியிருந்தோம் அதன்பின்னர்தான் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என்ற கருத்தினை சொல்லியிருக்கின்றார்கள். அவர்களுக்கு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு உதவியவர்கள் என்ற வகையில் அவர்கள் தார்மீக ரீதியாக வழங்கவேண்டிய விடயத்தினை தட்டிப்பறிக்கின்ற நிலையில் இருக்கின்றோம். பொறுப்புக்கூறும் முக்கியமான விடயம் என்னவென்றால் ஒற்றையாட்சி மூலமாக இலங்கையில் எதனையும் சாதித்துவிடவில்லை சுருக்கமாக சகலவிதத்திலும் கடந்த கால அனுபவங்களை பார்க்கின்ற போது ஒற்றையாட்சி தோல்விகண்டிருக்கின்றது. எமது பிராந்தியங்களில், எமது மாகாணங்களில் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் சமஸ்டி ஆட்சியினை ஏற்படுத்த வேண்டும் அதுவே சிறந்த தீர்வாகவும் அமையும். இன்னும் இன்னும் ஏமாற்றும் வித்தைகளை விட்டுவிட்டு நல்லாட்சி என்கின்ற அரசாங்கம் சொல்லாட்சியோடு நின்றுவிடாமல் செயலாட்சியாக மாறவேண்டும் அப்போதான் சிறுபான்மை மக்கள் அரசின் மீது நம்பிக்கை கொள்வார்கள் என்பதை எச்சரிக்கையாக கூறிக்கொள்கின்றேன் என்றார்.

Post a Comment

 
Top