0
சில அரச அதிகாரிகளைக் கொண்டு வேலைகள் செய்வது என்றால் அதில் மிகவும் கஸ்டமான நிலைமை காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள செமட்ட செவண மாதிரி கிராம வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்ற போது கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின் சகலதையும் இழந்து நிற்கும் எமது மக்களுக்கு நாங்கள் வேகமாக உழைக்க வேண்டியுள்ளது. அதற்கு ஈடு கொடுக்கின்றவர்களாக வீடமைப்பு அதிகார சபை காணப்படுகின்றது.
மூன்று தசாப்த காலங்களின் இராணுவத்தின் நடவடிக்கைகள் ஏற்பட்ட காரணமாக பல வீடுகள் சேதமடைந்து காணப்பட்டது என்று வீடமைப்பு அமைச்சருடன் தெரிவித்தேன். அது அவ்வாறு இல்லை என என்னுடன் முரண்பட்டுக் கொண்டார்.
எமது மாவட்டத்தில் சுனாமி கால கட்டங்களில் வழங்கப்பட்ட வீடுகள் சில பூட்டிக் கிடக்கின்றது. வீடுகள் சில விற்பனை செய்தும் இருக்கின்றார்கள். இவ்வாறான நடவடிக்கைகளை செய்து விடக் கூடாது.
மாவட்டத்தில் பலர் காணி மற்றும் வீடுகள் இன்றி கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த நல்லாட்சியை கொண்டு வந்தவர்கள் நாங்கள். இதன் பெருமை சிறுபான்மை மக்களுக்கு இருக்கின்றது.
சிறுபான்மை மக்கள் வழங்கிய அதிகப்படியான வாக்கின் காரணமாக இந்த நல்லாட்சி அரசாங்கம் உருவாகியது. ஜனாதிபதி அவருடைய மாவட்டத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாற்பதாயிரம் வாக்குகள் மாத்திரம் பெற்றார். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதிக்கு, மகிந்தவிற்கும் வழங்கப்பட்ட வாக்குகளில் இரண்டு இலட்சம் வாக்கும் அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக வருவதற்கு சிறுபான்மை இன மக்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு காத்திரபூர்வமாக இருந்துள்ளது என்பதை சிறுபான்மை இன மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் அளித்த வாக்குகளை வைத்து நாங்கள் பார்க்க முடியும் என்றார்.

Post a Comment

 
Top