0
நுண்கடன் நிதி நிறுவனங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை நல் வழிப்படுத்தலை நோக்காக கொள்ளாது, நிறுவனங்களின் தலைவர்களின் சொகுசு வாழ்வையே உயர்த்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நிதி அமைப்பு சம்மந்தமான சட்டமூலம் தொடர்பாக இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் மக்களிற்கு கடன் அடிப்படையில் குறித்த ஒரு தொகை பணத்தை கொடுக்கும் நிதி நிறுவனத்தினர், அந்த கடன் தொகையிலும் பார்க்க அதிகளவான வட்டியை அறவீட்டு மக்களை மீண்டும் மீண்டும் கடனிற்குள் தள்ளும் செயலை செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய வங்கியில் பதிவு செய்துள்ளோம், என்ற வாசகத்துடன் ஆரம்பத்தில்வரும் சில நிறுவனங்கள், மத்திய வங்கியின் பதிவினை சில வேளைகளில் அதிகார தொணிக்காக பயன்படுத்தி வருவதாகவும் கவலை வெளியிட்டார்.
மக்கள் தாம் விரும்பும் ஒரு தொகையினை கடனாக நிதி நிறுவனத்தில் கோரிப்பெறும் போது, அவர்கள் மக்கள் கேட்கும் தொகையினை வழங்காது, வரிகளை காரணம் காட்டி பணத்தினை குறைத்து கொடுக்கின்ற அதேவேளை, மக்கள் கேட்கும் தொகைக்கே வட்டியினை அறவிடுவதாகவும் இது நிறுத்தப்பட வேண்டும் எனவும் நிதி அமைப்பு சம்மந்தமான சட்டமூலம் பற்றி உரையாற்றும் போது பா.உ.வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

 
Top