0
(செய்தியாளர்.மூலையூரான்)
கிழக்கின் திருப்பதியாக விளங்கும் மட்டக்களப்பு   வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு  ஆலயத்தில் இவ்வருடமும் விரதங்களில் மகிமை மிகு விரதமாகிய விஷ்ணுவின் வைகுண்ட ஏகாதசி விரதம் மிகவும்  சிறப்பான முறையில் இடம்பெற்றது.

ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ சாட்சிநாதன் தெய்வேந்திரக்குருக்கள், உதவிக்குருக்களான பண்டரிநாத்,கிரிடாங்கன்,பவித்திரன் அவர்களினால்   விரத நிகழ்வானது 21.12.2015 சரியாக 10.30 மணியளவில் விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்களுக்கு பவித்திரம்[தெற்பை] கொடுக்கப்பட்டு விரதம்   ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து பூஜை நிகழ்வானது விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு மூலமூர்த்தியான ஸ்ரீதேவி பூதேவி சமேத விஷ்ணு பகவானுக்கு விசேட திரவிய கோமம்,ஷ்நவன கும்ப அபிசேகம்,அலங்காரம்,ஆராதணைகள்,வசந்தமண்டப பூஜை மற்றும் வைகுண்ட ஏகாதசி விரத கதை படிக்கப்பட்டு பகல் பூஜை நிறைவு பெற்றது.

அதனைத்தொடர்ந்து பி.ப  06.00 மணியளவில் முதலாம் சாம பூஜை   அபிசேகங்கள்,அலங்காரம்,ஆராதணைகள்,வசந்தமண்டப பூஜை மற்றும் ஏகாதசி விரத கதை படிக்கப்பட்டு இரண்டாம்  சாம பூஜை இரவு 09.30 மணியளவில் அபிசேகங்கள்,ஆராதணைகள்,வசந்தமண்டப பூஜையுடன் இடம்பெற்றது.

தொடர்ந்து விரதம் அனுஷ்டிக்கும்  பக்தர்கள் நலன் கருதி வந்தாறுமூலை கண்ணன் பஜனைக் கலை மன்றத்தின் 52வது ஆண்டு விழா,வைகுண்ட ஏகாதசி விரதத்தை சிறப்பிக்கும் முகமாக கண்ணன் பஜனைக் கலை மன்றத்தினரால் பஜனைகள், சொற்பொழிவு,கலை நிகழ்வுகள் என்பன நடாத்தப்பட்டது.

இன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.அத்தோடு  பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களினால் ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ சாட்சிநாதன் தெய்வேந்திரக்குருக்கள் அவர்களின் இறை சேவையை கௌரவித்து   பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

அடுத்து மூன்றாம் சாம பூஜையான முக்கோடி ஏகாதசி  என சிறப்பித்து கூறப்படும் சொர்க்கவாயல் வைகுண்ட ஏகாதசி பூஜையானது பி.ப  11.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு  பி.ப 11.42 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு விசேடதூப ஆராதணைகள்,தீப ஆராதணைகள், விசேட சுலோக  பூஜை அதனைத்தொடர்ந்து பக்தர்களினால் கிருஷ்ண கவசம் பாடப்பட்டு சொர்க்கவாயல் பூஜையானது கண்கொள்ளா காட்சியாக  இடம்பெற்றது.

தொடர்ந்து காலை 03.30  மணியளவில் திருப்பாவை பூஜை,வசந்தமண்டப பூஜை இடம்பெற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு  வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளி உள்வீதி உலா வருகை தந்து ஆலய தீர்த்த கிணற்றில்  தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.

அடுத்து விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டு விரதம் நிறைவு செய்யப்பட்டது.
இறுதியாக பிரசாதம் வழங்கப்பட்டு காலை 06.30 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.

இன் நிகழ்வில் மட்டக்களப்பின் பல பாகங்களில் இருந்து பெருந்திரளான  பக்தர்கள் வழமையை விட இவ்வருடம்   கலந்து  கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வைகுண்ட ஏகாதசி வந்த கதை!
மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகின்றது. இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். 

மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு 'யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்' என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றைத் தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். ஏகாதசியன்று இந்து சமயத்தவர் திருமண நிகழ்வுகளையும் தவிர்க்கின்றனர்.

இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினாராம். பகவானும் பிரம்ம தேவர்களுக்குத் தரிசனமளித்து அவர்களைக் காத்தருளினாராம் இவ்வாறு தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.

தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது என்றும் துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்குத் திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார் என்றும், அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.























Post a Comment

 
Top