இலங்கை அணிக்கு எதிரான 2வது T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய கடைசி மற்றும் 2வது டி20 போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அந்த அணி வீரர்கள் சீரான ஓட்டங்களை குவித்ததால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்தது.
சார்லஸ், ராம்தின் தலா 34 ஓட்டங்களும், வெய்ன் பிராவோ 31 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில், மலிங்கா, சிறிவர்த்தன தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு குஷால் பெரேரா (12) ஏமாற்றினார்.
அடுத்து வந்த சேஹான் ஜெயசூரிய அதிரடியாக விளையாடி 30 ஓட்டங்கள் குவித்தார். சந்திமால் (1), மேத்யூஸ் (5) ஒற்றை ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
சிறிவர்த்தன 15 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். நிதானமாக ஆடிய தொடக்க வீரர் டில்ஷான் (52) அரைசதம் எடுத்தார்.
இருப்பினும் அடுத்து வந்தவர்கள் வரிசையாக ஆட்டமிழக்க, இலங்கை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 139 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், பிராவோ 4 விக்கெட்டுகளையும், ராம்பால் 3 விக்கெட்டையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர்.
இந்த வெற்றி மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 1-1 என சமன் செய்துள்ளது.
மேலும், டெஸ்ட், ஒருநாள் தொடரை இழந்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது.
பிராவோ ஆட்டநாயகனாகவும், டில்ஷான் தொடர் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.






Post a Comment