0
கொட்டும் மழையில் நள்ளிரவு வேளையில் கிராமத்திற்குள் புகுந்த யானை நடாத்திய அட்டகாசத்தில் இருவீடுகள் தரைமட்டமாக்கப்பட்டதுடன் பயிர் பச்சைகளுக்கு பலத்த சேதமும் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள பழைய வளத்தாப்பிட்டிக்கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று நள்ளிரவு 12.30 மணிமுதல் 2.30 மணிவரையிலான காலப்பகுதிக்குள் இந்த பாரிய யானையின் அட்டகாசம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் பலத்த பீதியின் மத்தியில் தெரிவிக்கின்றனர். சுமார் 08வீடுகளுக்குள் பிரவேசித்த இந்த யானை இருவீடுகளை உடைத்துச் சேதப்படுத்தி தரைமட்டமாக்கியுள்ளது. 08 வீடுகளிலுள்ள வாழைகள் தென்னம் பிள்ளைகள் வீட்டுக்குள்ளிருந்த நெல்மூடைகள் அரிசி போன்றவற்றை உறிஞ்சியதோடு மட்டுமல்லாமல் வீட்டுக்குள்ளிருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்துச் சேதமாக்கியுள்ளது. வளத்தாப்பிட்டி காளிகோவில் வீதியிலேயே இந்த நள்ளிரவு அட்டகாசம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 2.35மணி அளவில் தனது வீட்டுக்குள் பிரவேசித்ததாகக் கூறும் எஸ்.நாகராஜா யானையின் அட்டகாசம் பற்றி விபரிக்கையில்: “அன்று நல்லமழை. நல்ல நித்திரையும். வீட்டிற்குள் நானும் மனைவியும் மகளும் படுத்துறங்கினோம். திடீரென பாரிய சத்தங்கள் கேட்டது. கண்விழித்து யன்னலால் பார்த்தேன். கரிய உருவமொன்று வாழைகளை முறித்து எறிந்து வருகின்றது. அது யானை தான் என்பதை ஊகித்துக் கொண்டேன். உடனே செய்வதறியாது மனைவி மகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினேன். பின்னர் வந்து பார்த்த போது எமது வீடு தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. உள்ளேயிருந்த எனது மோட்டார் சைக்கிள் நெல்மூடைகள் அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டிருந்தன. அங்கு ஒன்றுமே உருப்படியாக இல்லை.” என்றார். அதே வீதியிலுள்ள சிவலிங்கம் ரஜனிகாந்த் கூறுகையில்: வீட்டினுள் நானும் பிள்ளையும் உறங்கிக் கொண்டிருந்தோம். நல்லமழை. திடீரென சத்தம் கேட்டது. பிள்ளையை எடுத்துக் கொண்டு கதவைத் திறந்த போது எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அங்கு பாரிய யானையொன்று தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு நின்றது. எனக்கு ஈரல்குலை நடுங்கியது. தும்பிக்கையை நீட்டியதும் என்னை மறந்து வேகமாக இருளுக்குள் இருளாக ஓடினேன். அது துரத்தியது. ஆண்டவன் காவல் தப்பி விட்டோம். ஆனால் வீடும் இல்லை உடமைகளும் இல்லை. என்றார். ஆலயக் களஞ்சியமும் சேதம்! ஒன்றரை இலட்ச ரூபா மதிப்பீடு இதே வேளை நேற்று முன்தினமிரவு வளத்தாப்பிட்டி பத்திரகாளியம்பாள் ஆலயத்திற்குள் புகுந்த யானை அங்குள்ள களஞ்சியசாலைக்குள் புகுந்து அங்கிருந்த ஸ்பீக்கர் செற் அரிசி மூடைகள் 30 டியூப்லைற்ஸ் உள்ளிட்ட பல பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. சேதத்தின் பெறுமதி சுமார் ஒன்றரை லட்சருபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு சம்பங்கள் தொடர்பாக சம்மாந்துறைப் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறைப் பொலிசார் அங்கு சென்று பார்வையிட்டதுடன் மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்ததுடன் விசாரணைகளை மேற்கொண்டனர். கூப்பிட்ட குரலுக்கு பலன் இல்லை இதேவேளை அன்றிரவு 2 மணியளவில் அட்டகாசம் புரிந்த யானையை விரட்டுமாறு அங்கிருக்கக்கூடிய வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் சென்று 2.35 மணியளவில் பொதுமக்கள் முறையிட்ட போது “தற்சமயம் சாரதி இல்லை வர முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டதாம். இததனைக்கும் யானை நின்ற இடத்திற்குள் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்குமிடையிலான தூரம் சுமார் 500 மீற்றர் தான் என்று சொல்லப்படுகிறது. வளத்தாப்பிட்டியிலுள்ள பல்நோக்கு மண்டபத்தை அண்மைக்காலமாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதி பாதுகாப்பிற்கென அமைக்கப்பட்ட இவ் அலுவலகத்திலிருந்த உத்தியோகத்தர்களிடம் அட்டகாசம்புரிந்த யானையை விரட்டுமாறு மக்கள் கூறியதற்கு இவ்வாறு பதிலளிக்கப்பட்டு அங்கு வராமல் இருந்தமை குறித்து பொதுமக்கள் கவலையடைகின்றனர். நேற்று அவர்கள் அங்கு சென்று பார்வையிட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Read more at: http://www.battinews.lk/2015/11/photos.html
Copyright © www.battinews.lk

Post a Comment

 
Top