வருடத்தின் இறுதிப்பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் பெரும்பான்மையானவை தரக்குறைவானதாகவே அமையும். இதற்காக உரிய வேலைத்திட்டங்களை உரிய காலப்பகுதியில் மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான 2016ம் ஆண்டிற்குரிய இரண்டாவது இணைப்புக்குழு கூட்டம் புதன்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், விளையாட்டு அமைச்சு, மாகாண உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் வேலைத்திட்டம் போன்ற வேலைத்திட்டங்கள் நிறைவுபெறும் நிலையில் இருக்கின்றபோதும் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் மூலமாக ஒதுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பல இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கின்றது என கூறப்பட்டது. இவ்வேலைத்திட்டம் நிறைவுறுத்தப்படாமைக்கு காரணம் என்ன என்று பாராளுமன்ற உறுப்பினரால் கேள்வி எழுப்பப்பட்ட போது இதற்கு மூன்று பேர்களுக்கு வேலைத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளமையால் இவ்வாறான தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இவற்றினை தவிர்த்து கொள்வதற்கு எதிர்வரும் காலங்களில் பலருக்கு வேலைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கூறப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் 2016ம் ஆண்டு நிறைவுபெறுவதற்கு இரண்டு மாதம் உள்ளநிலையிலும், இனிவருகின்ற காலப்பகுதி மழை காலம் என்பதினாலும் செய்யப்படும் வேலைகள் தரக்குறைவாக அமைய சந்தர்ப்பமுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளதாகவும், இவை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

Post a Comment