94ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழாவில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 3 மாணவிகளுக்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
சுர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு மாவட்ட மட்டங்களில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று, தேசிய ரீதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கே இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த 284 பாடசாலை மாணவ மாணவிகள் பங்கு கொண்டனர்.
இவர்களில் முதலிடங்களைப் பெற்ற 6 மாணவர்கள் தேசிய ரீதியில் ஜுன் 22ஆம் திகதி கொழும்பிலுள்ள தேசிய கூட்டுறவு சபைக் கட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றினர்.
அதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வின்சன்ற் மகளிர் உயர் தேசியப் பாடசாலை மாணவியான செல்வி பாஸ்கரன் லோகேந்தினி சிரேஸ்ட பிரிவு கட்டுரைப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
பேச்சுப் போட்டி கனிஸ்ட பிரிவில் மட்டக்களப்பு பெரிய போரதீவு பாரதி வித்தியாலய மாணவியான செல்வி ரவீந்திரன் கீசாலினி இரண்டாமிடத்தையும், அதே போன்று சிரேஸ்ட பிரிவு பேச்சுப் போட்டியில் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி ஜெயக்குமார் விகடாயினி மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
இவர்கள் மூவருக்குமே கொழும்பு நெழும்பொக்குணவில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற 94ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழாவில் ஜனாதிபதியால் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
அதே போன்று மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபைக்கு நிலையான மாவட்ட கூட்டுறவு சபைக்கான விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இவ்விழாவில் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் இராசதுரை ராயப்பு, உப தலைவர் சின்னத்தம்பி சின்னராசா ஆகியோரும் பாடசாலைகளின் மாணவிகள், ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபையினால் மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட போட்டிகளில் மாவட்ட ரீதியில் றாவூர் அல்- அஸ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலை, கிரான் மத்திய கல்லூரி, வாழைச்சேனை அன்-நூர் மகா வித்தியாலயம், வின்சன்ற் மகளிர் உயர்தரப்பாடசாலை, மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி, வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயம், பெரிய பொரதீவு பாரதி வித்தியாலயம், செங்கலடி மத்திய கல்லூரி, அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், ஆகிய 9 பாடசாலைகளின் மாணவ மாணவிகள் வெற்றி பெற்றிரிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment