0
கிழக்கு பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவன் ஒருவர் பெரும்பான்மையின மாணவர்களால் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தாக்கிவர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் இன்று (27) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளை நினைவுகளை முகாமைத்துவ பீட மாணவன இ. சுமேஸ்காந் தனது முகநூலில் பதிவேற்றம் செய்தமைக்காக தாக்கப்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் இனவாதத்தை தூண்டாதே, படிக்கும் இடத்தில் இனவெறி வேண்டாம், கைது செய்யும் வரை போராட்டம் தொடரும், ஒடுக்காதே ஒடுக்காதே தமிழினத்தை ஒடுக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோசமெழுப்பினர்.

ஓழுக்காற்று நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேன்டும் எனும் தலைப்பிலான மகஜரை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாளேந்திரன் அவர்களிடம்  கையளித்தனர்.

தாக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மாணவன் தாக்கப்பட்டதை பொலிசில் முறைப்பாடு ஒன்றைப்  பதிவு செய்திருந்தனர். இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படா நிலையில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் குறித்த மாணவனின் வீட்டிற்கு சென்று பொலிஸ் முறைப்பாட்டை வாபஸ் பெறும் படி கோரியுள்ளனர் இது கண்டிக்கப்படவேண்டியது என எஸ். வியாளேந்திரன் தெரிவித்தார்.



Post a Comment

 
Top