இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பணத்தினை மோசடி செய்யும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அநுராதபுரம் சி.டி.சி. வரவேற்பு மண்டபத்தில் போக்குவரத்துச் சபை ஊழியர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், போக்குவரத்துச் சபை பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கவே இருக்கின்றது. அதனை பாதுகாப்பது ஒவ்வொரு ஊழியர்களின் பாரிய பொறுப்பாகும்.
போக்குவரத்துச் சபையில் சேவை செய்யும் ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் நேர்மையாக தமது கடமைகளை செய்தால் போக்குவரத்துச் சபை நஷ்டமடைவதில் இருந்து பாதுகாக்க முடியும். அதன் மூலம் சபைக்கு இலாபத்தை ஈட்டிக் கொள்வது மாத்திரமன்றி பொதுமக்களுக்கு சிறந்த சேவையினையும் வழங்க முடியுமென நான் இவ் விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
போக்குவரத்து சேவையில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ள 500 பஸ் வண்டிகளை எதிர்வரும் மே மாதத்தில் இருந்து சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உதிரிப்பாகங்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, சந்திராணி பண்டார, போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறி வர்த்தன, அநுராதபுரம் மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் சந்திம மஹிந்தசோம, போக்குவரத்துச் சபை ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment