0
சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மேலதிக வகுப்புகளுக்கு தடை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி நள்ளிரவில் இருந்து கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடையும் வரை அது தொடர்பான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கமைய பதாதைகள், சுவரொட்டிகளை காட்சிப்படுத்தல், மாதிரி வினாத்தாள்களை அச்சிடல் மற்றும் விநியோகித்தல் அவற்றைக் கொண்டு செல்லல் போன்றவற்றிற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என் ஜே.புஷ்பகுமார குறிப்பிடுகின்றார்.
இந்த உத்தரவை மீறி செயற்படுகின்ற நபர் அல்லது நிறுவனம் 1968 25 ஆம் இலக்க பகிரங்க பரீட்சைகள் சட்டத்தின் பிரகாரம் குற்றவாளியாக கருதப்படுவர் எனவும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தகைய நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்யுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இம்முறை சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

 
Top