0
இன்றைய உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று தான் நீரிழிவு நோய்.
நீரிழிவு நோய்க்கான இன்சுலின் மருந்தை பிரெட்ரிக் பேண்டிங்கை என்பவர் 1922 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.

அவரை கௌரவப்படுத்தும் விதமாக அவரது பிறந்தநாளான நவம்பர் 14 ஆம் திகதி ஐ.நாவால் உலக நீரிழிவு தினம் அறிவிக்கப்பட்டது.
உலகளவில் 415 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த எண்ணிக்கை வரவிருக்கின்ற 2040 ஆம் ஆண்டில் 642 மில்லியனாக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

6 நிமிடங்களுக்கு ஒருமுறை நீரிழிவு நோயால் ஒருவர் இறக்கின்றனர் என்று diabetesatals அமைப்பு தெரிவித்துள்ளது.

நீரிழிவு நோய்
நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது.
வயிற்றின் பின் பகுதியில் கணையம் (pancreass) என்னும் சுரப்பி உள்ளது. இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவதில்லை. இதனால் இரத்த ஓட்டத்தில் சக்கரையின் அளவு அதிகமாவதே நீரிழிவு நோய் எனப்படுகிறது.

                                                                2 வகைகள்
முதல் வகை, இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் நின்று விடுவது, இது குழந்தைகளை அதிகளவு பாதிக்கிறது.
இரண்டாவது வகை, இன்சுலின் போதிய அளவு சுரக்காமல் இருப்பது அல்லது செயல்படாமல் இருப்பது. இவ்வகை தான் நீரிழிவு நோய் உள்ளவர்களில், 90 சதவீதம் பேருக்கு உள்ளது.

45 வயதுக்கும் மேற்பட்டவர்கள், இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
உடல் எடையில் மாற்றம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி, அதிக தாகம் போன்றவை இதன் அறிகுறிகள். துவக்கத்திலேயே இதற்கு சிகிச்சை எடுக்கத் தவறினால் கண், இருதயம், சிறுநீரகம், கால்பாதம் ஆகியவற்றை பாதிப்படைய செய்யும்.

உணவு முறைகளாலும், உடற்பயிற்சியாலும் இரண்டாவது வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.
காரணங்கள்
பரம்பரைத் தன்மை
நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
உடல் பருமன்
சர்க்கரை நோயை வரவேற்கும் அடுத்த காரணி, உடல் பருமன் (Obesity). இனிப்புப் பண்டங்களையும் கொழுப்பு உணவு வகைகளையும் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும். அதற்கேற்பக் கணையம் அதிகமாக இன்சுலினைச் சுரந்து சுரந்து சீக்கிரத்தில் களைத்துப் போகிறது. இதனால், இவர்களுக்கு நீரிழிவு நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. உடல் பருமன் உள்ளவர்களில் 100-ல் 80 பேருக்கு இப்படித்தான் நீரிழிவு நோய் வருகிறது.
திசுக்களில் சேரும் கொழுப்பு
உடல் திசுக்களில் தேவைக்கு அதிகமாகக் கொழுப்பு சேரும்போது செல்களின் இயல்புத் தன்மை மாறுகிறது. இதனால், செல்களுக்குள் நுழைவதற்கு இன்சுலின் சிரமப்படுகிறது.
அப்படியே சென்றாலும், செல்களில் கொழுப்பு அடைத்துக் கொள்வதால், இன்சுலின் தனது இயல்பான பணியைச் செய்ய முடிவதில்லை. இதன் விளைவாகவும் நீரிழிவு நோய் ஏற்படும்.
அறிகுறிகள்
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகத் தாகம், அதிகப் பசி, உடல் எடை இழத்தல், அதிக சோர்வு, பார்வை மங்கல், அடிக்கடி நோய்க்கிருமிகள் தொற்றுவது, உடற்காயங்கள் மெதுவாக ஆறுவது மற்றும் உள்ளங்கை அல்லது பாதங்களில் மரத்துப்போதல் ஆகியவை.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை பார்ப்பது நலம், அறிகுறிகள் ஏதும் இல்லாமல் கூட நோய் தாக்கலாம்.
எனவே வரும் முன்னும், வந்த பின்னர் தொடர் சோதனைகளின் மூலம் உடலை கவனித்துக் கொள்வது அவசியம்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
வாழைப்பூ, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், கத்திரிப்பிஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கம் பிஞ்சு, அவரைப் பிஞ்சு.
இந்த காய்கறிகள் அனைத்தும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை, இவற்றை பச்சடியாகவோ, கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.
பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கீரையேனும் சாப்பிட வேண்டும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கீரைகள் அனைத்தும் சூப்பாகவும் செய்து அருந்தலாம்.
தவிர்க்க வேண்டியவைகள்
சர்க்கரை, குளுக்கோஸ், இனிப்பு பலகாரங்கள், கேக், சாக்லேட், ஐஸ்கிரீம், வெல்லம், உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, குளிர்பானங்கள். கேரட், பீட்ரூட் குறைந்த அளவு மாதம் இருமுறை சாப்பிடலாம்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி, சிக்கல்களைக் குறைப்பதற்கான டிப்ஸ்
* ரத்தச் சர்க்கரை, ரத்தஅழுத்தம், கொழுப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது.
* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நீரிழிவு நோய் மருத்துவரைச் சந்தித்து எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது.
* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தச் சர்க்கரை, கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துகொள்வது. குறிப்பாக ஹெச்.பி.ஏ.1சி வேல்யு எடுப்பது.
* வழக்கமான உடற்பயிற்சி
* 3 முறை சாப்பிடுவதற்கு பதிலாக, 4-5 முறை சாப்பிடும் முறையை பின்பற்றுவது.
* பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்வது.
* புகைப்பிடிப்பதைக் கை விடுவது.

* பாதங்களில் நோய்த்தொற்று, கால்ஆணி, காய்ப்பு போன்றவை ஏற்படுகின்றனவா என்று தினசரி கண்காணிப்பது.
* கண் விழித்திரையை ஆண்டுதோறும் பரிசோதிப்பது.
* 6 மாதங்களுக்கு ஒரு முறை சிறுநீரக செயல்பாடு பரிசோதனை செய்துகொள்வது.

* வாய் துர்நாற்றம் அடித்தால் பல் மருத்துவரை பார்ப்பது.
நோயை வரும் முன் காப்பது மிக அவசியம், ஆரோக்கியமான உணவு முறைகளின் மூலமும், உடற்பயிற்சியின் மூலம் எந்த நோயையும் அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளலாம்.

அதேசமயம் நோய் வந்த பின் துவண்டுவிடாமல் முறையான மருத்துவ ஆலோசனைகளின் பேரில், நமது வாழ்க்கையை கொண்டு சென்றால் வாழ்க்கை சிறக்கும்!!! வெற்றி கிட்டும்!!!

Post a Comment

 
Top