0
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் நகர் மற்றும்
செங்கலடி ஆகிய இடங்களில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இருவர் படுகாயமடைந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். முன்னதாக ஏறாவூர் நகரில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பன்குடாவெளியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஆர். றொபின் (வயது 27) என்பவர் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளும் வானும் சேதமடைந்துள்ளன. இவர் மட்டக்களப்பிலிருந்து ஏறாவூரை நோக்கி பயணம் செய்த போது சாரதிப் பயிற்சி வான் ஒன்றில் மோதி படுகாயமடைந்துள்ளார்.

 இதேவேளை செங்கலடியில் இடம்பெற்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் வீதி விபத்தில் ஏறாவூர் தளவாய்க் கிராமத்தைச் சேர்ந்த எஸ். ஸ்ரீஜெகன் என்பவர் காயமடைந்துள்ளார். இவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவங்கள் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

 
Top